கனடாவில் சாத்தான் என கூறி பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி கொலை செய்த நபரை நீதிமன்றம் விடுவிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த முடிவுக்கு உயிரிழந்த பெண்மணியின் குடும்பம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கனடாவின் பீட்டர்பரோ பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பீட்டர்பரோ பகுதியைச் சேர்ந்த சிண்டி டோர்பார் என்பவரின் குடியிருப்பு ஒன்றில் 47 வயதான ஜோன் லாய் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி, தாம் கடவுள் எனவும், சாத்தான்களை கொலை செய்யப் போகிறேன் எனவும் கத்திக் கொண்டே, டோர்பாருக்கு முன்பு பாய்ந்து அவரை 10 அங்குல கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் டோர்பார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் டோர்பாரின் உடல் முழுவதும் 127 வெட்டு காயங்கள் இருந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்துவந்த பொலிசார் ஜோனின் கையில் இருந்த ஆயுதத்தை கைப்பற்ற இருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவரை கைது செய்த பொலிசார், ஜோன் தொடர்ந்து சாத்தான் தொடர்பில் பேசி வருவதால் அவரை உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதில் அவருக்கு உளவியல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் அவர் திட்டமிட்டு இந்த கொலையை செய்யவில்லை என்பது நிரூபணமானது.
தற்போது உளவியல் சிகிச்சை முடிந்து அவர் பொதுமக்களுடன் சாதாரணமாக குடியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவானது தங்களை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கியதாக சிண்டி டோர்பாரின் நெருங்கிய தோழியான ஸ்டேசி ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.
அந்த கொடூர சம்பவத்திற்கு பின்னர் தாம் இதுவரை சகஜ நிலைக்கு திரும்பவில்லை என கூறும் ஸ்டேசி, இதுவரை தங்களின் எந்த கருத்தையும் ஜோன் லாய் விடுதலை விவகாரத்தில் அதிகாரிகள் கேட்டதில்லை எனவும், ஜோன் லாயை விடுவிப்பது, தமது தோழியின் குடும்பத்திற்கு நீதிமன்றம் செய்யும் மிகப்பெரிய துரோகம் எனவும் கூறியுள்ளார்.