சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு, டசன் கணக்கான சிவில் சமூக அமைப்புகள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
கனடாவின் மிகப் பெரிய தொழிலாளர் அமைப்பான கனேடிய தொழிலாளர் காங்கிரஸும், கனடாவின் மிகப் பெரிய தொழிற்சங்கங்களும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், சவூதி அரேபியாவிற்கு கனடாவின் தற்போதைய ஏற்றுமதியை நிறுத்துமாறு கோரி தங்கள் கையொப்பங்களைச் சேர்த்துள்ளன.
சிவில் சமூக அமைப்புகளின் கூட்டணியின் கடிதங்கள், முன்பு மார்ச் மற்றும் ஒகஸ்ட் 2019ஆம் ஆண்டு மற்றும் ஏப்ரல் 2020இல் ட்ரூடோவுக்கு அனுப்பப்பட்டன, ஆனால் இன்றுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யேமன் போரில் சவுதி அரேபியாவின் ஈடுபாடு மற்றும் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதை மேற்கோளிட்டு, கல்வியாளர்களும் ஆர்வலர்களும் சவுதி அரேபியாவிற்கு கனேடிய தயாரித்த எல்.ஏ.வி (இலகுரக கவச வாகனங்கள்) ஏற்றுமதியை இரத்து செய்யுமாறு ஒட்டாவாவுக்கு நீண்டகாலமாக அழுத்தம் கொடுத்துள்ளனர்.
யேமனில் நீண்டகாலமாக நிலவி வரும் மோதலில் சவூதி-ஐக்கிய அரபு அமீரகம் தலைமையிலான கூட்டணியால் கனேடிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான நம்பகமான ஆதாரங்களை அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஒன்ராறியோவை தளமாகக் கொண்ட ஜெனரல் டைனமிக்ஸ் லேண்ட் சிஸ்டம்ஸ் தயாரித்த எல்.ஏ.வி.களை சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான 14 பில்லியன் கனேடிய டொலர்கள் ஒப்பந்தம் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் 2014ஆம் ஆண்டு ஒப்பந்ம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து ட்ரூடோவின் லிபரல் கட்சி அரசாங்கத்தால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டது.
நவம்பர் 2018ஆம் ஆண்டு;, சவூதி அரேபியாவிற்கான புதிய ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை லிபரல் அரசாங்கம் இடைநீக்கம் செய்தது.
ஆனால் ஏப்ரல் மாதத்தில், ஆயிரக்கணக்கான கனேடியர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெறும் சர்ச்சைக்குரிய பல பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதால், இடைநீக்கத்தை நீக்க கனடா முடிவு செய்தது.