சரக்கு வாகன சாரதிகளுக்கான கட்டாய தடுப்பூசி ஆணையை கனேடிய மத்திய அரசு இடை நிறுத்த வேண்டும் என அல்பர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி நேற்று வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
அமெரிக்கா – கனடா இடையே சரக்குகளை ஏற்றியிறக்கும் பணியில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கான கட்டாய தடுப்பூசி ஆணையால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. அத்துடன், இந்த நடவடிக்கை நாட்டின் பணவீக்கத்திற்கும் வழிவகுக்கும் என நிறுவனங்கள் கூறுகின்றன.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒட்டாவா விதித்துள்ள கட்டாய தடுப்பூசி ஆணையால், கனேடிய சரக்கு வாகன நிறுவனங்களில் பணியாற்றும் சர்வதேச ஓட்டுநர்களில் 10% இழப்பு ஏற்பட்டுள்ளதாக சரக்குகளை கையாளும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையிலேயே கல்கரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அல்பர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி, சரக்கு வாகன சாரதிகளுக்கான கட்டாய தடுப்பூசி ஆணையை இரத்துச் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். கனடா மிகப்பெரிய பணவீக்கத்தின் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான சரக்கு வாகன ஓட்டுநர்களை இழப்பதற்கான நேரம் இதுவல்ல.
அமெரிக்காவிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கொவிட் சோதனைக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை இவ்வாறான சாரதிகளே எடுத்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கனடா – அமெரிக்கா இடையில் பொருட்களை ஏற்றியிறக்கும் பணியில் சுமார் 160,000 வாகன சாரதிகள் ஈடுபட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டாய தடுப்பூசி ஆணை காரணமாக இவர்களில் சுமார் 32,000 பேர் பணியிலிருந்து வெளியேற்றப்படலாம்.
ஏற்கனவே சுமார் 18,000 வரையான ஒட்டுநர்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில் இந்த நடவடிக்கை கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என கனேடிய சரக்கு வாகன ஓட்டுநர் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் சரக்கு வாகன சாரதிகளுக்கான கட்டாய தடுப்பூசி ஆணையால் பொருட்களின் விநியோகத்தில் பாரிய தாக்கங்கள் ஏற்படவில்லை என கனடா போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் சாரதிகளுக்கான கட்டாய தடுப்பூசி ஆணை விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தும். இது பொருட்களுக்கான பற்றாக்குறையை உருவாக்கும். இதனால் விலைகள் மேலும் அதிகரிக்கப்படும் சூழல் ஏற்படும் என ஒன்ராறியோவின் கேம்பிரிட்ஜில் உள்ள சலஞ்சர் மோட்டார் பிரைட் நிறுவன தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டான் ஐன்வெக்டர் கூறினார்.
கனடாவின் பணவீக்க விகிதம் டிசம்பரில் 4.8% ஐ எட்டியது. இது 30 ஆண்டு காலத்தில் இல்லாத உயர்வாகும். இந்நிலையில் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கான கட்டாய தடுப்பூசி ஆணை நீண்ட காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என பொருளாதார தெரிவிக்கின்றனர். கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆண்டுதோறும் தரைவழி ஊடாக 650 பில்லியன் கனேடிய டொலர் (521 பில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான சரக்கு பரிமாற்றம் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.