Reading Time: < 1 minute

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கான முதல் கனேடிய மருத்துவ ஆய்வுக்கு கூட்டாட்சிச் சுகாதார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்க டல்ஹெளசி பல்கலைக்கழகத்தில் உள்ள கனேடியத் தடுப்பூசி மையத்திற்கு கூட்டாட்சிச் சுகாதார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கனடாவின் தேசிய ஆராய்ச்சி பேரவை சாத்தியமான தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயற்படும். சாத்தியமான தடுப்பூசி ஆய்வுகள் வெற்றிகரமாக நடைபெற்றால், உள்நாட்டிலேயே தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும்’ என கூறினார்.

கொரோன வைரசை எதிர்த்துப் போராடுவதற்காக கூட்டாட்சி அரசு மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளது.

இதில் 23 மில்லியன் டொலர் முன் மருத்துவ ஆய்வு மற்றும் கனடாவில் சாத்தியமான தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளின் உற்பத்திக்கு 29 மில்லியன் ஆகியவை அடங்கும்.