கனடா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் தொற்று நோய் பரவல் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் தொற்று நோயில் கணிசமான வீழ்ச்சி மற்றும் அதிகரித்த தடுப்பூசி வீதங்களால் நாடு தைரியமடைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று நோய் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கில் உள்ளிட்ட மாகாணங்களில் விரைவில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் இது கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தாக்கங்களைச் செலுத்தலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான கனேடியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய, மாகாண அரசுகளின் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆதரித்தனர். எனினும் சிறய குழுக்கள் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கட்டாய தடுப்பூசித் திட்டத்தை எதிர்த்து 2022 இன் ஆரம்பம் முதல் கனரக வாகன சாரதிகள் ஒட்டாவா’வை முடக்கி போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம் மூன்று வாரங்கள் நீடித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கனடியப் பிரதமர் தலைநகர் ஒட்டாவாவில் அவசர கால சட்டத்தை அமுல் செய்தார்.
இந்நிலையில் ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கின் முதல்வர்கள் அனைத்து தரப்பினரையும் சமாளித்து மீண்டும் வெற்றி பெறுவதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சில வாக்காளர்களை அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளது என்று கருத்துக் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு தொற்று நோய் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க அவர்கள் தயங்கலாம் எனக் கருதப்படுகிறது. ஜூன் 2 ஆம் திகதி ஒன்ராறியோவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த வாரம் பெரும்பாலான இடங்களில் கட்டாய முககவச உத்தரவை மாகாணம் கைவிட்டது.
ஒக்டோபரில் தேர்தலை எதிர்கொள்ள உள்ள கியூபெக் மாகாணமும் அடுத்த மாதம் முதல் முககவச கட்டுப்பாடுகளை நீக்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே தொற்று நோய் அதிகரிக்கும் சமிக்ஞைகள் வெளிப்படும் இந்த நேரத்தில் மாகாணங்கள் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வருவது ஆபத்தை ஏற்பத்தலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.