பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக தங்களது தடுப்பூசி சிறப்பாகச் செயலாற்றுவதாக நம்புவதாக மொடர்னா தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் நோயெதிர்ப்புத் திறனைப் பாதிக்கும் என நம்பப்படும் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய திரிவு வைரஸ் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள் நடைபெறும் எனவும் மொடர்னா அறிவித்துள்ளது.
பிரிட்டனில் காணப்படும் திரிவு கொரோனா வைரஸூக்கு எதிராக மொடர்னா தடுப்பூசி செயலாற்றுகிறது. சிறப்பான நோயெதிர்ப்புத் திறனை உறுதி செய்ய இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற வேண்டும் எனவும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா புதிய திரிபு வைரஸ் தடுப்பூசிகளின் திறன்களை குறைமதிப்புக்குட்படுத்தும் என்ற கவலைகள் உருவாகியுள்ளன.
இந்நிலையிலேயே புதிய திரிவு வைரஸூக்கு எதிராக தங்களது தடுப்பூசி செயற்படுவதாக மொடர்னா மருந்தாக்க நிறுவனத் தலைவர் ஸ்டீபன் ஹோக் தெரிவித்துள்ளார்.
தற்போதைய எங்கள் தடுப்பூசி கொரோனா வைரஸூக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது. எனினும் வைரஸின் பிறழ்வுகள் தொடர்பில் நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
தொற்று நோயை எதிர்த்துப் போராட சாத்தியமான அனைத்து வழிகளையும் நாம் உருவாக்குவது முக்கியம் எனவும் ஸ்டீபன் ஹோக் குறிப்பிட்டார்.
மொடர்னாவில் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்களிடையே குறைந்தது ஒரு வருடத்துக்கு நோய் எதிர்ப்புத் திறன் நீடிக்கும் என எதிர்பாக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசியும் பிரிட்டனில் பரவும் புதிய திரிவு வைரஸூக்கு எதிராகச் செயலாற்றுவதாக அந்த மருந்தாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய திரிபுக்கு எதிராக அதன் செயல்திறன் எவ்வாறு உள்ளது? என்பது குறித்த முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.