சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொரோனா வைரஸை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தமது நாடுகள் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர் என வெள்ளிமாளிகை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த கலந்துரையாடலில், கடந்த புதன்கிழமை கையெழுத்திட்ட வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை குறித்தும், 2018 ல் அரச பாதுகாப்புக் குற்றச்சாட்டுக்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடிய குடிமக்களை சீனா விடுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட 8 ஆவது நோயாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டிய வீட்டுவசதிகளை வழங்கும் என பென்டகன் கூறியுள்ளது.
வுஹான் நகரில் உருவாகியது என சந்தேகிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 304 பேர் உயிரிழந்ததுடன் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.