உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று நோயை சமாளிக்க கியூபெக் மாகாணம் தயாராகவுள்ளதாக, கியூபெக்கின் பொது சுகாதார இயக்குனர் ஹொராசியோ அருடா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோய் வேகமாக பரவிவரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த உலகநாடுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) பொது சுகாதார இயக்குனர் ஹொராசியோ அருடா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் ஆபத்து இன்னும் குறைவாகவே கருதப்படுகிறது, ஆனால் நாங்கள் விழிப்புடன் இருப்போம்.
கனடாவிலோ அல்லது கியூபெக்கிலோ மக்கள் இந்த நோயுடன் திரும்பி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம், ஆனால் நாங்கள் அதை முன்கூட்டியே அறிந்து சமூகத்தில் பரவாமல் இருப்பதை உறுதி செய்வோம்.
அத்தோடு சீனாவிலிருந்து கியூபெக்கிற்கு வந்த 6 பேருக்கு முன்னெச்சரிக்கையாக வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’ என கூறினார்.
மனிதர்களின் நுரையீரலை தாக்கி, மூச்சுத்திணறல் போன்ற நோய்களை உருவாக்கி, மரணத்தை ஏற்படுத்தக் கூடியது கொரோனா வைரஸ். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது.
சீனாவின் வுவான் நகரில் உருவாகி உள்ள இந்த வைரஸ், தற்போது சீனா மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.
கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 550 இற்க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.