சீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்ற கருத்தை அங்கு ஆய்வு செய்துவரும் உலக சுகாதார அமைப்பு வல்லுநர் குழு நிராகரித்துள்ளது.
வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியமைக்கான வாய்ப்பு மிக-மிகக் குறைவு என சீனா – வுஹான் நகரில் ஆய்வு செய்துவரும் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் பென் எம்பரேக் கூறினார்.
எனினும் வைரஸ் பரவலின் மூலத்தைக் கண்டறிய மேலும் கூடுதல் ஆய்வுகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியது. தற்போது 106 மில்லியனுக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் உலகெங்கும் பதிவாகியுள்ளனர். 23 இலட்சம் பேர் இதுவரை கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பு சர்வதேச நிபுணர் குழுவொன்றை அமைத்தது. எனினும் இந்தக் குழு சீனாவுக்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுக்க சீனா அனுமதி மறுத்து வந்தது.
நீண்ட இழுத்தடிப்புக்களின் பின்னர் கடந்த மாதமே இதற்கான அனுமதியை சீனா வழங்கியது.
இந்நிலையில் தங்களது ஆய்வில் சில முக்கியமான விபரங்களைக் கண்டறிய முடிந்தது என உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் பென் எம்பரேக் கூறினார். எனினும் தலைகீழான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அவா் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவுவதற்கு முன்னர் முதலில் விலங்குகளிடம் தோன்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் அது எப்படி சாத்தியம்? என்பது குறித்து உறுதியான தகவல்களை அவர் வெளியிடவில்லை.
கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்க முயன்ற போது, அது இயற்கையாக வௌவால்களில் இருந்து தோன்றியிருக்கலாம். பின்னர் வுஹான் நகரில் இருந்து பரவியிருக்கலாம் என்ற கருதுகோள் உள்ளது எனவும் நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் பென் எம்பரேக் தெரிவித்தார்.
சீனாவின் வுஹானில் நகரில் அதிகாரபூர்வமாக முதல் கொரோனா வைரஸ் நோயாளி டிசம்பர் 2019-இல் அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பு வரை அப்பகுதியில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கொரோனா வைரஸ் வுஹானில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் ஏனைய பிராந்தியங்களில் அந்தத் தொற்று நோய் இருந்திருக்கலாம் என சீனாவின் சுகாதார ஆணையங்களின் நிபுணர் லியாங் வன்னியன் கூறினார்.
இதேவேளை, நிபுணர் குழுவின் அறிவிப்பு மூலம் கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என நிபுணர்கள் குழு கூறுகிறது. எனினும் அதற்கான ஆதாரங்கள் எதனையும் அவா்கள் முன்வைக்கவில்லை.