Reading Time: < 1 minute

கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில், ஆகத்து மாதம் 16ஆம் திகதி முதல், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இருப்பதாக தெரியவருபவர்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆல்பர்ட்டாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலும், மாகாண தலைமை மருத்துவ அலுவலரான Dr. Deena Hinshaw, மீதமிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளையும் இரண்டு கட்டமாக நீக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, வரும் வியாழக்கிழமை முதல் கொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பிலிருப்பதாக தெரியவந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமில்லை.

அத்துடன், ஆகத்து மாதம் 16ஆம் திகதி முதல், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இருப்பதாக தெரியவருபவர்கள் கூட தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமில்லை என்றும்,

தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஹொட்டல்களும் இனி கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பயன்படுத்தப்படப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம்மிடம் தடுப்பூசி தயாராக இருக்கும் நிலையில், கடந்த காலத்தில் நாம் பின்பற்றிய இதுபோன்ற கட்டுப்பாடுகளுக்கான தேவை குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார் Dr. Deena Hinshaw.

ஆனால், இது தவறான முன்னுதாரணம் என்று கூறியுள்ள மருத்துவத்துறை நிபுணர்கள், மற்ற மாகாணங்களும் இதையே பின்பற்றும் அபாயம் உள்ளது என்றும், அதன் தாக்கம் நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதையும் பாதிக்கும் என்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பலரும், கொரோனா பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கட்டுப்பாடுகள் நீக்கம் அறிவியல் சாராதது, அரசியல் சார்ந்தது என்றும், அது மற்ற மாகாணங்களையும் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.