சத்திய பிரமாணம் செய்து உறுதி மொழி எடுக்க வேண்டும்… புலம்பெயர்ந்தோர் கனேடிய குடியுரிமை பெற்றுக்கொள்ள முன்னர் அதற்கான சத்தியப்பிரமாணம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டுமென கனடா சமஷ்டி நீதிமன்று ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
கனேடிய குடிமகனாக மாறுவது ஒரு பாக்கியம். புதியவர்கள் கனேடிய குடியுரிமை பெறும்போது நமது அரசியலமைப்பையும் நம் நாட்டின் சட்டதிட்டங்கயையும் பின்பற்றுவோமென உறுதியளிப்பது அவசியம் என நீதிபதி சைமன் நோயல் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆண்டுகளாக நிரந்தர வதிவாளராக இருந்த மொன்றியலைத் சேர்ந்த தொழிலதிபர் சுலைமான் அல் முஹைடிப் என்பவரின் குடியுரிமை விண்ணப்பம் 2012 இல் இரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
எனினும் விசாரணையில் சுலைமான் அல் முஹைடிப் தனது வெளிநாட்டு வணிக தொடர்பு நடவடிக்கைகள் குறித்து வெளிப்படைத்தன்மை பேணவில்லை எனவும், குடியுரிமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவில்லை எனவும் அரசு தரப்பு சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டினர்.
ஆனால் குடியுரிமை நீதிபதி ஏற்கனவே அவரது குடியுரிமை ஆவணங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். சத்தியப்பிரமாணம் செய்வது ஒரு சம்பிரதாயம் மட்டுமே என சுலைமான் அல் முஹைடிப் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர். எனினும் இந்த வாதத்தை ஏற்க நீதிபதி நோயல் மறுத்துவிட்டார்.
குடியுரிமை சத்தியப்பிரமாணம் வெறும் சம்பிரதாயம் மட்டுமே என்ற வாதத்துடன் நான் உடன்படவில்லை என நீதிபதி தெரிவித்தார்.
ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு விண்ணப்பதாரர் குடியுரிமைக்கான முழுமையான உரிமையைப் பெறுவதில்லை. அனைத்து செயன்முறைகளையும் அவர் பூரணப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 170,000 புலம்பெயர்ந்தோர் கனடாவில் குடியுரிமை சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர் என உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.