கனடாவின் கியூபெக் மாகாணத்தில் போலியாக குண்டுப் பீதியை ஏற்படுத்திய நபர் மொரோக்கோ நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாகாணத்தின் பல்வேறு இடங்களில் போலியாக, குண்டுத் தாக்குதல் தொடர்பில் பீதியை ஏற்படுத்தியதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கியூபெக் பொலிஸார் இந்த விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளனர். 45 வயதான ஆண் ஒருவர் போலி குண்டுப் பீதியை பரப்பியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரொக்கோவின் டாப்ராவுட் நகரில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா மட்டுமன்றி உலகின் வேறு நாடுகளுக்கும் இந்த நபர் போலியான மின்னஞ்சல்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மின்னஞ்சல் மூலம் இந்த நபர் பீதியை ஏற்படுத்தி வந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
குண்டு வைக்கப்பட்டுள்ள இடத்தை அம்பலப்படுத்த கப்பம் வழங்குமாறு இந்த நபர் மின்னஞ்சல் ஊடாக கோரியுள்ளார்.
பாடசாலைகள், கடைகள், காரியாலயங்கள், அரசாங்க மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட கியூபெக் மாகாணத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போலி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.