Reading Time: 2 minutes

கடந்த அக்டோபரில், ஹெய்தி நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று 16 அமெரிக்க மிஷனெரிகள் மற்றும் கனேடிய மிஷனெரி ஒருவர் என, 17 பேரைக் கடத்திச் சென்றது.

400 Mawozo gang என்று அழைக்கப்படும் அந்த கடத்தல் கும்பல், சிலரை விமான நிலையத்திற்கு அனுப்புவதற்காக மிஷனெரிகள் சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற பேருந்தைக் கடத்தியது.

அவர்களில் ஒருவரான Dale Wideman (24) என்ற கனேடியர், தற்போது தன கடத்தப்பட்டது குறித்த பயங்கர அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தென்மேற்கு ஒன்ராறியோவைச் சேர்ந்த Dale, இரண்டு மாதங்கள் கடத்தல்காரர்கள் பிடியிலிருந்த நிலையில், தற்போது கனடா திரும்பியுள்ளார்.

19 வயதில் கிறிஸ்தவராக மாறிய Dale, பல மிஷனெரிகளின் கதைகளை படித்ததால், தானும் ஒரு மிஷனெரியாகவேண்டும் என கனவு கண்டவண்ணம் இருந்திருக்கிறார்.

தனது 24ஆவது வயதில், ஹெய்திக்கு செல்வதே கடவுளின் திட்டம் என்பதை உணர்ந்ததாக தெரிவிக்கும் Dale, Christian Aid Ministries என்ற மிஷனெரிகள் குழுவுடன் இணைந்துகொண்டிருக்கிறார்.

ஜூலை மாதத்தில் ஹெய்தியின் ஜனாதிபதியான Jovenel Moïse கொலை செய்யப்பட்டதையும், அங்கு குழப்பம் நிலவுவதையும் அறிந்திருந்தும் அங்கு செல்வதென முடிவு செய்திருக்கிறார் Dale.

அந்த மிஷனெரி குழுவில் Daleஇன் வேலை மருந்துகள் முதலான முக்கியமான பொருட்களை விநியோகம் செய்வதும் பாதுகாப்பாக சேமித்து வைத்திருப்பதுமாகும்.

அக்டோபர் மாதம் 16ஆம் திகதி, Dale 11 மிஷனெரிகள், பிள்ளைகள் உட்பட 16 பேர் பயணிக்கும் ஒரு வேனை ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறார். 80 நிமிடங்கள் பயணம் செய்து, தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அடைய 10 நிமிடங்களே இருக்கும் நிலையில், திடீரென ஏராளமான வேன்கள் Dale முதலானவர்கள் பயணித்துக்கொண்டிருந்த வேனை சூழ்ந்துகொள்ள, சிலர் வேனிலிருந்து குதித்து Daleஐப் பிடித்து வேனிலிருந்து வெளியே இழுத்து, அவரைத் தாக்கி, வேறொரு வேனில் ஏற்றியிருக்கிறார்கள்.

சரி, எப்படியும் நம்மை இவர்கள் நாட்டுப்புறமான ஓரிடத்துக்குக் கொண்டு சென்று சுட்டுக் கொன்று தன் உடலை புதர்களுக்குள் வீசிவிடப்போகிறார்கள், அவ்வளவுதான் என முடிவே செய்துவிட்டிருக்கிறார் Dale.

கனடாவிலிருக்கும் தனது குடும்பம் நினைவுக்கு வர, அவர்களை சந்திக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று என்ணியவாறே கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார் Dale.

பிறகு, கடத்தல்காரர்கள் அவரை ஒரு அறையில் கொண்டு அடைக்க, அங்கு ஏற்கனவே மற்ற மிஷனெரிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார் Dale.

பிரார்த்தனை செய்வது மட்டுமே 17 பேரின் முழு நேர வேலையாகியிருக்கிறது.

இப்படியே நாட்கள் கடந்து செல்ல, எப்படியாவது கடத்தல்காரர்களிடமிருந்து தப்புவது என்ற எண்ணம் சிலருக்கு உருவாக, அதன்படி ஒரு நாள் இரவு அனைவருமாக அடைத்துவைக்கப்பட்ட இடத்திலிருந்து தப்பி வெகுதூரம் நடந்தே சென்றிருக்கிறார்கள். வழியில் ஒருவரை சந்திக்க, அவரது மொபைலை வாங்கி அதன் உதவியால் உதவி கோர, கடலோரக் காவல்படை விமானம் ஒன்று அவர்களை ப்ளோரிடாவுக்கு கொண்டு சேர்த்துள்ளது.

பின்னர் கனடா திரும்பிய Dale, தனது குடும்பத்தினர் நண்பர்களை மீண்டும் காண முடிந்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்தும் தன் மதத்தைக் குறித்த நம்பிக்கையைத் தான் விடவில்லை என்று கூறும் Dale, பணத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் இந்த கடத்தல்காரர்கள் அப்பாவி மக்களை துன்புறுத்துவதாக தெரிவிக்கிறார்.

ஆனாலும், மீண்டும் தான் ஹெய்திக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கிறார் Dale. வாழ்க்கை மிகவும் குறுகியது, அது முழுவதையுமே எனக்காக வீணாக்க நான் விரும்பவில்லை என்கிறார் அவர்.