Reading Time: < 1 minute

2025ஆம் ஆண்டின் இறுதியில் பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளதால், ஏராளமானோர் கனடாவிலிருந்து வெளியேறக்கூடும் என கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டின் இறுதியில் பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளதால், தற்காலிக அனுமதி வைத்துள்ளோரில் பெரும்பாலானோர் கனடாவிலிருந்து தாமாகவே வெளியேறக்கூடும் என கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற புலம்பெயர்தல் கமிட்டி முன் விளக்கமளித்த மார்க் மில்லர், தற்காலிக அனுமதிகள் காலாவதியாகும் பெரும்பாலானோர் கனடாவிலிருந்து தாமாகவே வெளியேறக்கூடும் என கூறிய நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டாம் (Tom Kmiec), சுமார் 4.9 மில்லியன் பேரின் தற்காலிக அனுமதிகள் காலாவதி ஆகும் நிலையில், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை கனடா அரசு எப்படி உறுதி செய்ய உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மில்லர், நமது நாட்டுக்குள் வருவோரில் பெரும்பாலானோர் தற்காலிகமாக வந்துள்ளதால், அவர்களுடைய அனுமதிகள் காலாவதியானபின் இங்கு தங்க அவர்களுக்கு உரிமை இல்லை, ஆகவே அவர்கள் தாமாகவே வெளியேறிவிடுவார்கள் என்றார்.

அப்படி தாமாக வெளியேறாதவர்களை புலம்பெயர்தல் அமைச்சகம் எப்படி கையாளப்போகிறது என டாம் விடாமல் கேட்க, அவர்களை வெளியேற்ற கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜன்சிக்கு உரிமை உள்ளது என்றார் மில்லர்.

ஆக, 2025ஆம் ஆண்டின் இறுதியில் தற்காலிக அனுமதிகள் காலாவதியாகுபவர்களுக்கு சிக்கல்தான் என்பது புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லரின் பதிலிலிருந்து தெரியவருகிறது எனலாம்.