Reading Time: < 1 minute

காலநிலை மாற்ற அபாயங்களை மதிப்பிடுவதற்கான கனடாவின் தாமதமான அணுகுமுறைகளால் பல கனேடியர்கள் உயிராபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் காட்டுத் தீ அபாயம் உள்ளதாகக் கருதப்படும் பகுதிகளில் அதனை அறியாமாலேயே பெருமளவு கனேடியர்கள் வாழ்ந்து வருவதாகக் அரசாங்க நிதியுதவியுடன் ஆய்வுகளை மேற்கொண்ட சிந்தனைக் குழாம் அமைப்பு கூறுகிறது.

வீடமைப்பு, கட்டட நிர்மானம், வீதி அமைப்பு, மின்சார விநியோக அமைப்புக்கள் ஆகியவை பல தசாப்தங்களில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுகின்றனவா? என இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டது.

தூரநோக்கின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டங்கள், வீடுகள் எதிர்காலத்தில் வெள்ள ஆபத்தை எதிர்கொள்ளலாம். பலர் வெள்ள அபாயம் குறித்து அறியாமலேயே வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர் எனவும் ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது.

கனடாவில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நிலை போதிய அளவில் இல்லை எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கனடா முழுவதும் ஆற்று வெள்ளத்தால் சுமார் 650,000 வீடுகள் தற்போது ஆபத்தில் உள்ளன. மேலும் 325,000 வீடுகள் திடீர் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.

இருப்பினும் சொத்துக்களை வாங்குவோர் பெரும்பாலும் இயற்கை அபாயங்கள் பற்றி அறியாமல் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடமைப்பு முகவர் நிறுவனங்கள், வீட்டுக் காப்பீட்டு முகவர் நிறுவனங்கள், வங்கிகள் அல்லது பிற அடமானக் கடன் வழங்குபவர்களால் இவ்வாறான அபாயங்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

கனேடிய காலநிலை மாற்றம் தொடர்பான செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி டொலராக உயரும் எனவும் புதிய உள்கட்டமைப்பு குறித்த தீா்மானங்களின்போது காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை எனவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள முக்கிய உள்கட்டமைப்பு ரீதியாக சேதத்தின் விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கும் என்பதை எங்கள் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என ஆய்வாளர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.