கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லிட்டன் நகரம் காட்டுத் தீயால் அழிந்த நிலையில் அங்கு இருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
லிட்டன் நகரில் தீப்பரவல் தொடர்வதால் அங்கு நுழைவது பாதுகாப்பானதாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் குறித்து மேலதிக தகவல்களை அறியவும் காணாமல் போனவர்களை தேடுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
காட்டுத் தீ திடீரென வேகமாகப் பரவ ஆரம்பித்ததை அடுத்து லிட்டனில் இருந்து சுமார் 1,000 குடியிருப்பாளர்கள் புதன்கிழமை மாலை ஒரு சில நிமிட அறிவிப்புடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். மக்கள் வெளியேறுவதற்கு முதல் நாள் லிட்டனில் கனடாவில் சாதனை மட்ட வெப்பநிலையாக 49.6 செல்சியஸ் வெப்பம் பதிவானது.
தொடர்பாடல் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வான்கூவரின் வடகிழக்கில் 150 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள லிட்டன் நகரத்தில் இன்னமும் யாராவது தங்கியிருக்கிறார்களா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காணாமல் போயுள்ள பலா் அங்கு இருக்கிறார்கள் என நம்புகிறோம் என பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பொது பாதுகாப்பு அமைச்சர் மைக் பார்ன்வொர்த் கூறினார்,
காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஆர்.சி.எம்.பி. பொலிஸார் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.
காட்டுத் தீயை அடுத்து லிட்டனில் இருந்து வெளியேறியவர்கள் மாகாணம் முழுவதும் உள்ள இடைத்தங்கள் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தீயில் அழிந்த லிட்டன் நகரத்தை அரசு மீண்டும் கட்டியெழுப்பும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்தார்.
பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் ஜோன் ஹொர்கன் மற்றும் லிட்டன் பழங்குடி தலைவர் ஜோன் ஹோகன் ஆகியோருடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாகவும் ட்ரூடோ தெரிவித்தார்.
வான்கூவரிலிருந்து வடகிழக்கில் 355 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்லூப்ஸில் வியாழக்கிழமை மற்றொரு காட்டுத்தீ அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனினும் மறுநாளே மக்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்ப அதிகாரிகள் அனுமதித்தனர்.