Reading Time: < 1 minute

கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இந்திய தம்பதி, சமீபத்தில் ஆல்பர்ட்டாவிலுள்ள ஜாஸ்பர் நகரில் குடியேறினார்கள்.

எப்படியும் கனடாவில் குடியுரிமை பெற்றுவிடலாம் என் நம்பியிருந்த அவர்களுடைய எதிர்காலம் காட்டுத்தீயால் கேள்விக்குறியாகியுள்ளது.

2023ஆம் ஆண்டு, இந்தியர்களான ரமன்தீப் சிங்கும் (28) அவரது மனைவியான சிம்ரன் சத்வாலும் (28) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள ஜாஸ்பர் நகருக்கு குடிபெயர்ந்தார்கள்.

2108ஆம் ஆண்டு ஒரு மாணவராக கனடாவுக்கு வந்த ரமன்தீப், 2021ஆம் ஆண்டு படித்து முடித்து பணி உரிமம் பெற்று (open work permit), சர்ரேயிலுள்ள உணவகம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார்.

பின்னர், கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் வாழவும், பணி செய்யவும், குடியமரவும் வகை செய்யும் ஆல்பர்ட்டா மாகாணத்தின் Alberta’s Rural Renewal Stream program என்னும் திட்டத்தின் கீழ் ஜாஸ்பர் நகருக்கு குடிபெயர்ந்தார்.

அப்படியே நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்று, பிறகு குடியுரிமையும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும்போதுதான் இயற்கை சதி செய்தது.

ஆம், ஜாஸ்பர் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், அங்கு வாழ்ந்த சுமார் 25,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

அதனால், அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாமல் ரமன்தீப், சிம்ரன் தம்பதியர் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கனேடிய குடியுரிமை கனவு பொய்த்துப்போகுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உருவாகியுள்ளது.

ரமன்தீப்பின் பணி உரிமம் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதியுடன் காலாவதியாகிறது. அதை நீட்டிக்க அவர் விண்ணப்பம் அளித்துள்ளார். இதுவரை அதன் நிலை என்ன என்பது தெரியவில்லை என்கிறார் அவர்.

இதற்கிடையில், பணி உரிமை புதுப்பித்தல் ஆவணங்கள், ஜாஸ்பருக்குச் சென்று தீயில் எரிந்துபோயிருக்குமோ என்ற சந்தேகமும் ரமன்தீப்பைப்போலவே, அங்கு தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வந்த வெளிநாட்டவர்கள் சிலருக்கும் உருவாகியுள்ளது.