Reading Time: < 1 minute

காசாவில் இடம்பெறும் யுத்தத்தை பதிவு செய்வதற்காக தொடர்ந்து காசாவிலேயே தங்கியிருக்கப்போவதாக கனடாவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் தங்கியிருந்து அங்கு நடப்பவற்றை பதிவு செய்யவேண்டியது எனது கடமை என கருதுகின்றேன் என கனடாவை சேர்ந்த மன்சூர் சூமன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

காசாவில் தங்கியிருக்கவேண்டிய கடப்பாடு உள்ளது
காசாவிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளார். எனினும் தனது குடும்பத்தை அங்கிருந்து அவர் அகற்றியுள்ளார்.

தனது மனைவியும் ஐந்து பிள்ளைகளும் செவ்வாய்கிழமை எகிப்து எல்லை ஊடாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என முகாமைத்துவ ஆலோசகரான அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் காசாவில் தங்கியிருக்கவேண்டிய கடப்பாடு தனக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2.3 மில்லியன் மக்களின் துயரம்நீடிக்கும்வரையில் காசாவிலேயே தங்கியிருப்பது அங்கு என்ன நடக்கின்றது என்ற உண்மையை வெளி உலகிற்கு தெரிவிப்பது எனது மத மனிதாபிமான கடப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

என்னால் ஆங்கிலத்தில் உரையாட முடியும் நான் மேற்குலகில் வாழ்ந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெரூசலேத்தை சேர்ந்த அவர் இரண்டு வருடங்களிற்கு முன்னர், தனது பிள்ளைகள் தனது பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே தனது குடும்பத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குடியேற தீ தீர்மானத்தை எடுத்தார்.

காசா எனது மனைவியின் பூர்வீகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இங்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தோம் எனது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைக்கு சென்றார்கள் .

நானும் மனைவியும் இங்கு தொழில்புரிகின்றோம் எங்களிற்கு நண்பர்கள் உள்ளனர் உள்ளுர் மசூதி மிகச்சிறந்த இடம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் யுத்தத்தின் பிடியில் சிக்குவோம் என எதிர்பார்க்கவில்லை எனதெரிவிக்கும் அவர் , தான் வசிக்கும் கான்யூனிசில் ஒரு சிறிய மருத்துவமனையை உருவாக்கியுள்ளார், அங்குள்ள பிரசவ விடுதிக்கு அருகில் உள்ள சிறிய அறையில் அவர் உறங்குகின்றார்.

மேலும் எப்போதெல்லாம் குழந்தையொன்று பிறக்கின்றதோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியான செய்தியை நான் செவிமடுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.