காவல்துறையினரின் சுற்றுக்காவல் வாகனம் ஒன்றும் மேலும் இருண்டு வாகனங்களும் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மிட்லான்டில், நெடுஞ்சாலை 93 மற்றும் Yonge Street பகுதியில் திங்கட்கிழமை பிற்பல் ஒரு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தின் போது காவல்துறையினரின் வாகனம் ஒன்று கவிழ்ந்து, அதன் முன் கண்ணாடி நெருங்கிய நிலையில், அதற்குள் சிக்குண்ட அதிகாரிகள் வெளியேறுவதற்கு முயற்சித்த வேளையில், அங்கே இருந்த பொதுமக்கள் அதிகாரிகள் வெளியேறுவதற்கு உதவியுள்ளனர்.
உடைந்த முன் கண்ணாடி ஊடாக அதிகாரிகள் வெளியேறியதாகவும், அவர்களுக்கு சிறிய அளவு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் காவல்துறை அதிகாரி ஒருவரும், பிறிதொரு வாகனத்தின் சாரதி ஒருவரும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற வேளையில் காவல்துறை வாகனத்தின் சமிக்கை விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்துள்ள போதிலும், ஏதாவது அழைப்பின் பெயரில் அந்த வாகனம் சென்று கொண்டிருந்ததா என்பதனை விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.