Reading Time: < 1 minute

பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி விட்டு, அவர்களிடம் இருந்து பணம், கடனட்டடை உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிவந்த ஒரு கும்பல் தொடர்பில், கனடா தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் டூர்ஹம் பிராந்தியம் மற்றும் கல்கரி போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை தொடர்பிலான முறைப்பாடுகளை அடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதியில் இருந்து இது குறித்து விசாரணைகள் தொடங்கியதாக டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி, அஜெக்ஸ் பகுதியில் உள்ள Wal-Mart வர்த்தக நிலையப் பகுதியில் பெண் ஒருவரை அணுகிய சந்தேக நபர்கள், குறித்த அந்தப் பெண் 20 டொலர் நோட்டை நிலத்தில் வீழ்த்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த விடயத்தில் அவரது கவனம் சிதறிய வேளையில், அவரது பணப்பையில் இருந்து பிறிதொரு சந்தேக நபர் கடனட்டையைத் திருடியுள்ள சம்பவம் பின்னரே குறித்த அந்தப் பெண்ணால் உணரப்பட்டுள்ளது. தனது கடனட்டை திருடப்பட்டுள்ளதையும், அதிலிருந்து பல தடவைகள் பணம் பெறப்பட்டிருப்பதையும் அவர் தம்மிடம் முறையிட்டதாக இது தொடர்பில் இன்று தகவல் வெளியிட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் டூர்ஹம் மற்றும் பீல் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஆறு நபர்கள் குழுவாக இணைந்து இவ்வாறன திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமை கண்டறியப்பட்டதாக கல்கரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆறு சந்தேக நபர்களில் மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அந்த மூவருக்கும் நிலையான முகவரிகள் இல்லை எனவும், கைது செய்யப்படும்போது அவர்களிடம் றோமானிய கடவுச் சீட்டு இருந்ததாகவும், அவர்கள் மீது திருட்டு, மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மற்றைய மூன்று சந்தேக நபர்கள் கல்கரியில் வைத்து கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.