கல்வி கற்பதற்காக கனடாவுக்குச் சென்ற 50,000 மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லவில்லை என்னும் அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், கனடாவிலுள்ள கல்லுரிகளில் சேர்வதற்காக கல்வி அனுமதி பெற்றவர்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை என அந்தக் கல்லூரிகள் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் தெரிவித்துள்ளன.
கல்வி கற்பதற்காக அனுமதி பெற்றுவிட்டு கல்லூரிகளுக்கு வராத அந்த மாணவர்கள் எங்கே சென்றிருக்கக்கூடும் என்பது குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வழியாக, கனடாவின் கல்வி அனுமதியை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என சிலர் தெரிவிக்கிறார்கள்.
கல்வி அனுமதி பெற்ற அந்த மாணவர்கள், கனடாவில் வேலை தேடுவதற்காகவோ அல்லது கனேடிய குடியிருப்பு அனுமதி பெறுவதற்காகவோ, ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என முன்னாள் ஃபெடரல் பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவிக்கிறார்.
முறைப்படி அனுமதி பெறாத வெளிநாட்டு ஏஜண்டுகள் அல்லது புலம்பெயர்தல் ஆலோசகர்கள் இந்த கல்வி அனுமதிகளை தவறாக பயன்படுத்தக்கூடும் என்கிறார் புலம்பெயர்தல் சட்டத்தரணி ஒருவர்.
ஆக, கல்வி அனுமதி பெற்றுவிட்டு, கல்லூரிக்குச் செல்லாமல், அதை வேலை, அமெரிக்கா செல்லுதல் போன்ற விடயங்களுக்காக பயன்படுத்துவதைத் தடுக்க, சர்வதேச மாணவர்களை முன்கூட்டியே கல்லூரிக் கட்டணம் செலுத்தச் செய்வது போன்ற நடவடிக்கைகளை அறிமுகம் செய்யவேண்டும் என துறைசார் நிபுணர்கள் அரசை வலியுறுத்தியுள்ளார்கள்.