இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடு முழுவதும் பல தசாப்தங்களாக நீடித்த அமைதியின்மை மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் தமிழர் படுகொலைகள் இடம்பெற்றன. கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் இந்த கொடிய நிகழ்வுகள் 26 ஆண்டுகள் நீடித்த ஆயுத மோதலைத் தூண்டியது. இது பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் காரணமானது. தமிழர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அழிக்கப்பட்டன.
இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.
கருப்பு ஜூலை வன்முறைகளைத் தொடர்ந்து வந்த மாதங்களில் இலங்கையில் நடந்த வன்முறைகளுக்கு பதிலளிக்க கனடா அரசாங்கம் ஒரு சிறப்பு நடவடிக்கையை செயற்படுத்தியது. இது 1,800 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கனடாவில் குடியேற உதவியது. கறுப்பு ஜூலை கொடூரங்களில் இருந்து தப்பிய பல தமிழ் கனேடிய மக்களை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
அவர்களின் இழப்பு, இடப்பெயர்வு மற்றும் பின்னடைவு போன்ற வேதனையான அனுபவங்களால் நெகிழ்ந்து போனேன்.
கனடா இப்போது உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடங்களில் ஒன்றாக உள்ளது. கனடாவை இன்று வலுவான, துடிப்பான மற்றும் பல்கலாசார நாடாக மாற்றுவதற்கு பெருமளவில் பங்களித்ததற்காக தமிழ் கனேடியர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ கனடா தயாராக உள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் சட்டத்தின் ஆட்சியை பேணுவதற்கும் இலங்கை அரசாங்கத்தையும் இலங்கை நாடாளுமன்றத்தால் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் கனடா வலுவாக ஊக்குவிக்கிறது.
இந்த இக்கட்டான காலங்களில் போராட்டக்காரர்களின் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கனடா மீண்டும் வலியுறுத்துகிறது.
கறுப்பு ஜூலை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன. அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளோம் என்றுள்ளது.
Source: https://pm.gc.ca/en/news/statements/2022/07/23/statement-prime-minister-39th-anniversary-black-july