கருக்கலைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளித்த பதில் தொடர்பான காணொளி வைரலாகி வருகின்றது.
பிரதமரின் இந்த பதில் தொடர்பில் பலரும் பாராட்டி வருகின்றனர். கனடிய மக்கள் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இந்தக் கேள்வியை பிரதமரிடம் எழுப்பியிருந்தார்.
வின்னிபிக் மொனிடோபா பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் ட்ரூடோ விஜயம் செய்திருந்த போது இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
“கட்டாய தடுப்பூசி மற்றும் கருக்கலைப்பு என்பனவற்றை தாம் எதிர்க்கின்றேன்” என கட்சி ஆதரவாளர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
“பெண்கள் தங்களது உடல் தொடர்பான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என கருதுகின்றீர்களா? என பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு குறித்த இளைஞர், தனிப்பட்ட ரீதியில் இல்லை என கருதுகின்றேன் என பதிலளித்துள்ளார்.
பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவரின் கருவை கலைப்பது நியாமில்லையா? என பிரதமர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நிச்சயமாக, இந்த சந்தர்ப்பம் சிக்கலானது” என இளைஞர் பதிலளித்துள்ளார்.
“எந்த சிக்கலும் கிடையாது பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டால் அந்தக் கருவினை கலைப்பது பெண்களின் உரிமை” என பிரதர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் உரிமைகளுக்காக பிரதமர் குரல் கொடுத்தமை குறித்து இணையத்தில் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
பெண்களின் உரிமைகளுக்காக சரியான கருத்தினை பிரதமர் வெளியிட்டார் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.