கிரிமியாவில் உள்ள கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில், வழிசெலுத்தல் அமைப்புகளில் கனேடிய தயாரிப்பான பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள கருங்கடலில் 16 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் ரஷ்ய கப்பல்களை தாக்க முயற்சித்ததாகவும் செவஸ்டோபோல் விரிகுடாவில் நடந்த இந்த தாக்குதலை ரஷ்ய கடற்படை முறியடித்தாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்களில் காணப்படும் கனேடிய தயாரிப்பான வழிசெலுத்தல் தொகுதிகளை ரஷ்ய இராணுவம் ஆய்வு செய்தது.
நேவிகேஷன் ரிசீவரின் நினைவகத்திலிருந்து மீட்கப்பட்ட தகவல்களின் முடிவுகளின்படி, ஒடேசா நகருக்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்து கடல்சார் ஆளில்லா விமானங்களின் ஏவுதல் மேற்கொள்ளப்பட்டது’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான செவாஸ்டோபோலில் உள்ள ரஷ்யாவின் கடற்படைத் தளத்திற்குச் செல்வதற்கு முன், ஆளில்லா விமானங்கள் ‘தானிய நடைபாதை’ பாதுகாப்பான மண்டலத்தில் நகர்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஆளில்லா விமானங்களில் ஒன்று ‘உக்ரைன் துறைமுகங்களில் இருந்து விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக உக்ரைன் அல்லது அதன் மேற்கத்திய நாடுகளால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிவிலியன் கப்பல்களில் ஒன்றிலிருந்து’ ஏவப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
பிரித்தானிய இராணுவ ‘நிபுணர்களின்’ உதவியுடன் செவஸ்டோபோல் தாக்குதலுக்கு உக்ரைன் திட்டமிட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், குற்றச்சாட்டுகளை பிரித்தானியா மறுத்துள்ளது.