Reading Time: < 1 minute

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், வீடுகளை மீண்டும் கட்டி எழுப்ப அங்குள்ள கட்டுமானப் பணியாளர்களுக்கு மரம் தேவைப்படுகிறது.

ஆனால், ட்ரம்ப் வரிவிதிப்பால் அவர்கள் இக்கட்டான ஒரு நிலைமையில் உள்ளார்கள்.

அதாவது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், தனது மரக்கட்டைகளில் 70 சதவிகிதத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவந்தது.

ஆனால், ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சத்தால், வேறு நாடுகளுக்கு மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்ய அம்மாகாணம் திட்டமிட்டுவருகிறது.

கலிபோர்னியாவில் தீயில் எரிந்துபோன வீடுகளை மீண்டும் கட்டும் முயற்சி துவக்கப்பட உள்ள நிலையில், வீடுகளைக் கட்ட அங்குள்ள கட்டுமானப்பணியாளர்களுக்கு மரக்கட்டைகள் தேவைப்படுகின்றன.

ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீது வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளதால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரக்கட்டைகளுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது.

ஆனால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரக்கட்டைகளுக்கு 25 சதவிகித வரி விதித்தாலும், தங்களுக்கு வேறு வழியில்லை, மரக்கடைகளை வாங்கித்தான் ஆகவேண்டும் என்கிறார்கள் கலிபோர்னியா கட்டுமானப் பணியாளர்கள்.

காரணம், கலிபோர்னியாவில் மரம் அறுக்கும் ஆலைகள் இல்லை. அத்துடன், சுற்றுச்சூழல் கொள்கைகள் முதலான விடயங்களால் உள்ளூரிலேயே இப்போதைக்கு மரம் வெட்டி கட்டைகளை அறுக்கமுடியாது. அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

மேலும், நாங்கள் கனேடிய மரக்கட்டைகளைத்தான் நம்பியிருக்கிறோம், கனேடிய மரக்கட்டைகள் தரமானவைகள் என்று கூறும் கலிபோர்னியா கட்டுமானத்துறை கூட்டமைப்பின் தலைவரான Dan Dunmoyer, கனேடிய மரக்கட்டைகளை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை என்கிறார்.

ஆக, எடுத்தோம் கவிழ்த்தோம் என, பதவிக்கு வந்ததும் அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டுவிட்டார் ட்ரம்ப்.

ஆனால், நடைமுறையில், ஒரு வாரத்தில் இதெல்லாம் நடக்கவேண்டுமென்றால், பொருட்கள் விலை உயரப்போகின்றன என்று பொருள், அதை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிறார் Dan Dunmoyer.

Comments are closed, but trackbacks and pingbacks are open.