கனேடிய பொதுத் தேர்தலுக்கான 40 நாள் பரப்புரைகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று காலையில் ஆளுநர் நாயகம் ஜுலி பயாட்டியைச் சந்திக்கவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, நாடாளுமன்றைக் கலைக்குமாறான வேண்டுகோளை அவரிடம் விடுக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று வன்கூவர் செல்லவுள்ள பிரதமர் ரூடோ, அங்கே லிபரல் சார்பில் போட்டியிடும் முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளர் தாமரா தக்ரட்டுடன் இணைந்து, அங்கு இடம்பெறும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை பழமைவாதக் கட்சித் தலைவர் ஆன்ட்ரூ ஷீர் தனது தேர்தல் பரப்புரையினை கியூபெக்கில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் ஆரம்பிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை ரொரன்ரோவில் இடம்பெறவுள்ள பேரணி ஒன்றிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
அதேபோல புதிய சனநாயகக் கட்சித் தலைவர் ஒன்ராறியோவிலும், பசுமைக் கட்சித் தலைவர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் தமது தேர்தல் பரப்புரைகளை தொடங்கவுள்ளனர்.
கனேடிய தேர்தல் சட்டங்களின் பிரகாரம் கனேடிய மத்திய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.