கடந்த ஓராண்டுக்கு முன்னர், வீடு புகுந்து கடத்தப்பட்ட Elnaz Hajtamiri வழக்கில் அதிரடி திருப்பமாக பிராம்டன் பெண் ஒருவர் கைதாகியுள்ளார்.
ஒன்ராறியோ மாகாண காவல்துறை வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் குறித்த கைது நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய கடத்தல் வழக்கில் சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, ஒரு மாதத்திற்கு பின்னர் ஒன்ராறியோ பொலிசார் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அந்த சந்தேக நபர்களில் ஒருவர் 35 வயதுடைய தேஷான் டேவிஸ் என அடையாளம் காணப்பட்ட நிலையில், பொலிசார் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளனர். ஆனால் இதுவரை அவர் பொலிஸ் வசம் சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
வசாகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து பொலிஸ் வேடத்தில் நுழைந்த மூவர் கடந்த 2022 ஜனவரி 12ம் திகதி Elnaz Hajtamiri என்பவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
கடத்தப்படுவதற்கு ஒருவாரம் முன்னர் வாகனம் நிறுத்தும் சுரங்கப் பகுதியில் சமையல் பாத்திரம் ஒன்றால் தாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது முன்னாள் காதலன் உட்பட நால்வர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதனிடையே, Elnaz Hajtamiri-ஐ தேடும் நடவடிக்கை தொடர்ந்து நீடிப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, Elnaz Hajtamiri தொடர்பில் தகவல் அளிக்கும் நபருக்கு 100,000 கனேடிய டொலர் வெகுமதியாக அளிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தான் 30 வயதான Krystal P. Lawrence என்ற பெண்மணி கைதாகியுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.