கனடாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி வரும் பெண்ணியவாதியான மேகன் மர்ஃபி (Meghan Murphy) மூன்றாம் பாலினத்தவர் அல்லது திருநங்கைகள் குறித்து வௌியிட்டுள்ள கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, திருநங்கைகளின் உரிமைகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்ட குறித்த பெண்ணியவாதி வழங்கிய நிகழ்வை ரத்து செய்ய மறுத்ததற்காக கனேடிய நூலகம் ஒன்றின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எழுத்தாளரான மேகன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நூலக மண்டபத்தினுள் உரையாற்றிக் கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கானவர்கள் ரொறென்றோ பொது நூலகத்தின் கிளைக்கு முன்பாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், பாலின அடையாளம் மற்றும் சமூகம், சட்டம் மற்றும் பெண்கள் பற்றிய அவரது பேச்சை அனுமதிக்கும் முடிவை நூலகம் மாற்றிக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பெண்ணியவாதியான மர்ஃபி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரானவர் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சுமத்திய போதும், அதனை அவர் வன்மையாக மறுத்துள்ளார்.
அதேவேளை, நூலகத்தினுள்ளும் வௌியேயும் அமைதியை காக்க தமது அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக ரொறெண்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேகன் மர்ஃபியின் உரை நிறைவடைந்ததும், பங்கேற்பாளர்கள் கட்டிடத்தின் பின்புறமாக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டதாக அங்கு நிலைகொண்டிருந்த செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெண் சிறைச்சாலைகள், பெண் அகதிகள் மற்றும் அவர்கள் உடை மாற்றும் அறைகள் போன்ற இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றே செல்வி மேகன் மர்பி வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரானவர் அல்ல எனவும், அண்மையில் கனடாவில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலத்திற்கு எதிரான கருத்துக்களை வௌியிட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில், பாலின வெளிப்பாடு மற்றும் அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடைசெய்ய கனடாவின் உரிமைச் சட்டத்தை திருத்திய சட்டமூலத்திற்கு எதிராகவே அவர் பேசியுள்ளார்.
இது பெண்களுக்கான “பாதுகாப்பான இடங்களை” அழிப்பதன் மூலம் அவர்களின் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்றும் மேகன் சாடியுள்ளார்.