Reading Time: < 1 minute

கொரோனா தொற்றுக்குப் பின், முதல் நபராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார் பிரித்தானிய மகாராணியார்.

உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்திப்பதற்காக பிரித்தானியா வந்துள்ள கனேடிய பிரதமரை, மகாராணியார் தனது விண்ட்ஸர் மாளிகைக்கு வரவேற்றுள்ளார்.

இந்த சந்திப்பின்போது மகாராணியாருக்கு அருகிலிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் நீல நிறப் பூக்கள் (உக்ரைன் கொடியில் உள்ள நிறங்கள்), உக்ரைனுக்கு மகாராணியாரின் ஆதரவை சொல்லாமல் சொல்வது போல் அமைந்திருந்தன.

மகாராணியாரை சந்திக்கும்போது கனேடிய பிரதமர் ட்ரூடோ புன்னகையும், பெரும் சிரிப்புமாக அவருடன் அளவளாவுவதையும், மகாராணியாரின் கைகளைப் பற்றியபடி அன்பும் மரியாதையுமாக நிற்பதையும் காட்டும் புகைப்படங்களை இங்கு காணலாம்.

1970களில் ஒரு சிறுவனாக மகாராணியாரை பலமுறை சந்தித்துள்ளார் ட்ரூடோ. காரணம், அப்போது கனடாவின் பிரதமராக இருந்தவர் ட்ரூடோவின் தந்தையான Pierre Trudeau தான்!

மகாராணியாரை சந்தித்தபின் அதுகுறித்து பேசிய ட்ரூடோ, மகாராணியாரை 45 ஆண்டுகளுக்கு மேலாக எனக்குத் தெரியும் என்பதைக் கூறுவதில் பெருமை அடைகிறேன், இன்று அவரை சந்தித்தபோது கனடாவைக் குறித்து பல்வேறு விடயங்களைக் கேட்டு அறிந்துகொண்டார்.

என்னைப் பொருத்தவரை, வழக்கம் போல, உலக நிகழ்வுகள் குறித்துப் பயனுள்ள பல விடயங்களைக் குறித்த உரையாடல்கள் எங்களுக்குள் நிகந்தது என்றார் ட்ரூடோ.

பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணியார்தான் கனடாவுக்கும் மகாராணியார் என்பது குறிப்பிடத்தக்கது.