கனேடிய பல்கலைக்கழகம் ஒன்றில், சாக்லேட் விற்பனை இயந்திரத்தில் ரகசிய கமெரா ஒன்று பொருத்தப்பட்டிருந்த விடயம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள விற்பனை இயந்திரம் ஒன்றில், மாணவர்கள் சிலர் சிப்ஸ் வாங்க முயன்றுள்ளனர்.
அப்போது, அதிலிருந்த சிறிய திரையில் ஒரு செய்தி தோன்றியுள்ளது. அந்த செய்தியைப் படித்த மாணவர்கள் பல்கலை அலுவலர்களுக்கு தகவலளிக்க, மாணவர்கள் மட்டுமின்றி அலுவலர்களும் அதிர்ச்சியடைந்தார்கள்.
’இயந்திரத்தில் கோளாறு, இயந்திரத்தால் முகத்தை சரியாக அடையாளம் காணமுடியவில்லை’ என அந்த செய்தி கூறியுள்ளது.
அதாவது, அந்த இயந்திரத்தில் ஒரு கமெரா பொருத்தப்பட்டிருகிறது. அது இவ்வளவு காலமாக மாணவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால், அந்த இயந்திரத்தில் கமெரா இருக்கும் விடயம் யாருக்கும் தெரியாது!
ஆக, அந்த செய்தியிலிருந்து, அந்த இயந்திரத்தில் ரகசிய கமெரா ஒன்று இருந்தது தெரியவந்ததையடுத்து, அத்தகைய இயந்திரங்களை விரைவில் அகற்ற இருப்பதாக பல்கலை உறுதியளித்துள்ளது.
அந்த இயந்திரம் அகற்றப்படும்வரை, அதிலுள்ள சாஃப்ட்வேரை செயலிழக்கச் செய்யுமாறு பல்கலை அந்த நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால், அது என்ன சாஃப்ட்வேரை செயலிழக்கச் செய்வது? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என மாணவர்களே அதிரடி நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள்.
ஆம், அந்த இயந்திரத்தில் கமெரா இருக்கும் இடத்தின் மீது சுயிங்கம் மற்றும் பேப்பரை ஒட்டி மறைத்துவிட்டார்கள் மாணவர்கள்!