Reading Time: < 1 minute

கனேடிய குடியிருப்புப் பள்ளிகளில் பழங்குடி கனேடியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எவராலும் மறக்க முடியாது. இதுபோல் இனியும் கனடாவில் இடம்பெறக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்போம் என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட குடியிருப்பு பள்ளிகளில் பழங்குடியின சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.

கனடாவின் எட்மண்டன் அருகே உள்ள மாஸ்க்வாசிஸ் – செவன் சோரோஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் கூடியிருந்த சுமார் 2.000 வரையான பழங்குடி சமூகத்தினர் மத்தியில் போப்பாண்டவர் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இதுபோல் இனியும் கனடாவில் இடம்பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போம் என கருத்து வெளியிட்டுள்ளார்.

அக்காலத்தில் பல கிறிஸ்தவர்களால், பூர்வீக இனத்தவர் விடுதிப் பள்ளி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகளுக்காக, அப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்களிடம் திருத்தந்தை மன்னிப்புக் கேட்டுள்ளார்.

150,000த்துக்கும் மேற்பட்ட பூர்வீக இனங்களின் சிறார் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு விடுதிப் பள்ளிகளில் வைக்கப்பட்டனர். இவர்களில் பலர், உடல், மனம், உணர்வு, மற்றும், பாலியல் ரீதியில் கடும் உரிமை மீறல்களை எதிர்கொண்டனர். இத்தகைய வேதனைக்குரிய பள்ளி அமைப்பின் மரபு இன்றும் இருக்கின்றது. தற்போது கத்தோலிக்கத் திருஅவையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வினத்தவரின் மனக்காயங்களைக் குணப்படுத்தி, அவர்களோடு ஒப்புரவாகும் நடவடிக்கைக்கு கனடா அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்னும், உண்மை மற்றும் ஒப்புரவு பணிக்குழுவின் திட்டத்தை அரசு முழுமையாய்ச் செயற்படுத்தும். ஒப்புரவு ஏற்படுத்துவது, கனடாவின் அனைத்து மக்களின் பொறுப்பாக உள்ளது.

கடந்த காலத்தில் மாணவர் விடுதிப் பள்ளிகளில் நடந்ததை எவராலும் மறக்க முடியாது. இதுபோல் இனியும் கனடாவில் இடம்பெறக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்போம். பூர்வீக இனத்தவர் மற்றும், கனடா நாட்டினர் அனைவருக்கும், ஒப்புரவு மற்றும், குணப்படுத்தல் உணர்வில், சிறந்ததொரு வருங்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.