இந்தியரான தன் கணவரும் அவரது தாயாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கனேடிய குடிமகள் ஒருவர் பொலிசில் புகாரளித்துள்ளார்.
தன் கணவர் மாந்திரீகத்தில் ஈடுபடுபவர் என தான் சந்தேகிப்பதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கலாச்சாரம் மற்றும் குடும்ப அமைப்பு குறித்து கற்றுக்கொள்வதற்காக கனேடிய குடிமகளான இசபெல் (Izabel Bricolt, 47), 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
கோவாவில் அவர் வாழ்ந்துவரும்போது ராஜேஷ் என்னும் நபரை சந்தித்துள்ளார். அவர் இசபெல்லிடம் தன் காதலை வெளிப்படுத்த, இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். ராஜேஷ் இசபெல்லை மும்பைக்கு அழைத்துவந்துள்ளார்.
முதலில் தன் பெயர் ராஜேஷ் ஓபராய் என்றும், தான் பாரம்பரியம் மிக்க ஒரு கலாச்சாரத்தைப் பின் தொடர்பவன், சினிமா துறையில் பணியாற்றுகிறேன் என்றெல்லாம் ராஜேஷ் கூறிய நிலையில், உண்மையில் அவரது பெயர் ராஜேஷ் ஷுக்லா என்றும், அவர் தன்னிடம் சொன்னதெல்லாம் பொய் என்றும் இசபெல்லுக்குத் தெரியவந்துள்ளது.
தனக்கு உடல் ரீதியாக சில பிரச்சினைகள் இருந்தும் ராஜேஷ் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தனக்கு உணவளிக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ள இசபெல், அவர் மாந்திரீகம் செய்பவர் என தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் பொலிசாரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இசபெல் அளித்த புகாரின்பேரில், பொலிசார் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ராஜேஷ் மற்றும் அவரது தாய் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.