Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கடற்கரைப் பகுதிகளில் மட்டும் கைவிடப்பட்ட நிலையில் சுமார் 1,400 படகுகள் காணப்படுவதாக, அவ்வாறான படகுகளை மீட்டு அப்புறப்படுத்தும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படகுகள் அவ்வாறு கைவிடப்பட்டு அந்த இடங்களிலேயே இருந்து சூழலை மாசுபடுத்துவதை தவிர்க்கும் வகையில், படகுகளையும் அவற்றின் பாகங்களையும் மறு சுழற்சிக்கு உற்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறியும் முயற்சியில் மாகாண அரசு ஈடுபட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட, கைவிடப்பட்ட படகுகளை அப்புறப்படுத்தும் அமைப்பின் தலைவர் ஜோன் றோ, கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் படகுகளின் எண்ணிக்கை வெறும் 1,400 என்பது மிகவும் குறைவு எனவும், இவற்றை விடவும் மேலும் 1,000 படகுகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் இவ்வாறு கைவிடப்படும் நான்கு அல்லது ஐந்து படகுகளைக் காணக்கூடியவாறு இருக்கும் எனவும், Ladysmith கடற்கரையில் மட்டும் சுமார் 60 படகுகள் மூழ்கிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி ஒரு சாதாரண 25 அடி நீளமான கண்ணாடிநார் படகு கடலில் மூழ்குமானால், அது 4,80,000 ஸ்ரோக்களை(குளிர்பாணம் அருந்தப் பயன்படும் குழாய்) கடலில் கொட்டுவதற்கு சமமானது என்ற விபரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.