கனடாவில் போதைப்பொருளுக்கு அடிமையாவதில் இருந்து மீண்டெழுவதற்கான திட்டம் வைத்திருப்பதாக பசுமைக் கட்சியின் தலைவர் எலிசபெத் மே தெரிவித்துள்ளார்.
வின்னிபெக்கில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறினார்.
இதன்போது போதைக்கு அடிமையாவதை ஒரு குற்றவியல் பிரச்சினையாக கருதுவதை நாம் நிறுத்த வேண்டும் எனவும் இது ஒரு தேசிய சுகாதார அவசரநிலை என்றும் கூறினார்.
போதைப் பொருள் பழக்கத்தால் அதிகப்படியான இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, பசுமை கட்சி ஒரு தேசிய சுகாதார அவசர நிலையை அறிவிக்கவுள்ளது. அத்துடன் மனநலம் மற்றும் அடிமையாதல் குறித்து திட்டங்களை அதிகரிக்கவும், சமூக அமைப்புகளுக்கு நிதியளிக்கவும் முடிவு செய்துள்ளது.
அத்துடன் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து விடுபடும் நோக்குடனான சிகிச்சைகள் மருந்துகளும் பரவலாகக் கிடைப்பதை உறுதிசெய்வதாகவும் எலிசபெத் மே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இப்பிரச்சினை பசுமை கட்சியின் தலைவருக்கு தனிப்பட்ட ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது மைத்துனர் என்டர்டெய்னர் மார்கோட் கிடர் என்பவர் போதைப் பழக்கத்தை எதிர்த்துப் போராடி 2018 இல் இறந்தார்.
அத்துடன், பசுமைக் கட்சிக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோயர் மெயின்லான்ட் மற்றும் வான்கூவர் தீவு ஆகியவற்றிலிருந்து பெரும் ஆதரவு கிடைக்கிறது. இவை போதைப் பொருள் பழக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.
2017 இல் கிட்டத்தட்ட 4,000 கனேடியர்களின் மரணத்திற்கு opioid என்னும் போதைப்பொருள் பழக்கம் வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.