பெரும்பான்மையான கனேடியர்கள் ஒரு தேசிய மருந்தக திட்டத்தையே ஆதரிக்கின்றார்கள் என்று ஹார்ட் அண்ட் ஸ்ட்ரோக் மற்றும் கனேடிய தாதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மேற்கொண்ட புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 90 வீதமான கனேடிய பிரஜைகள், தேசிய மருந்தக திட்டம் இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளதுடன், இது அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு சமமான அணுகலை வழங்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“கனேடியர்களுக்கு இது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என ஹார்ட் அண்ட் ஸ்ட்ரோக்கிற்கான கொள்கை வகுப்பு மற்றும் செயற்றிட்ட இயக்குனர் மெனுவல் அரங்கோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் “கனேடியர்கள், எங்கள் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு முறையை விரும்புவதால், அந்த முறைமைக்கு அமைவாக எம்மிடமும் மருந்துகள் உள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 1,500 கனேடியர்களை இணையத்தின் வழியாக தொடர்பு கொண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது மருத்துகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதா என்பது குறித்தும் வினவப்பட்டுள்ளது.