கனேடிய பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கான லிபரல் அரசின் கட்டாயத் தடுப்பூசித் திட்டம் தோ்தலில் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான தற்போதைய ஆளும் சிறுபான்மை அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, செப்டம்பா் 20ம் திகதி தோ்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்தல் கனேடிய அரசின் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கனேடியர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் வாய்ப்பாக அமையும் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கனேடிய மத்திய அரசு அதிகாரிகள், போக்குவரத்து தொழிலாளர்கள், விமானம் மற்றும் ரயில் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்கி ட்ரூடோ அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரச பணியாளர்களுக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் ட்ரூடோ அரசின் அறிவிப்பை பிரதான எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ’டூல் விமர்சித்துள்ளார்.
கட்டாய தடுப்பூசித் திட்டத்துக்குப் பதிலாக கனடியர்களுக்கு தினசரி சோதனையை ஆதரிப்பதாகக் அவர் கூறினார்.
எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ட்ரூடோ, மத்திய அரச பணியாளர்களுக்கான கட்டாய தடுப்பூசித் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார். முறையான மருத்துவக் காரணம் இல்லாமல் தடுப்பூசியைத் தவிர்ப்பவர்கள் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்தார். ஆனால் அந்த விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து அவா் விரிவாகக் கூறவில்லை.
பெரும்பான்மையான கனேடியர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொற்று நோயில் இருந்து நாங்கள் ஒன்றாக விடுதலை பெறுவதற்கான வழி எனவும் பிரதமர் கூறினார்.
இந்நிலையில் ஆரம்பத்தில் கட்டாய தடுப்பூசித் திட்டம் குறித்து மௌனம் காத்து வந்த கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ’டூல், இப்போது அதற்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வருகிறார். தோ்தல் பிரச்சாரத்துக்கான ஒரு கருவியாக இப்போது அவர் இந்த விடயத்தைக் கையிலெடுத்துள்ளார்.
தனிப்பட்ட சுதந்திரத்திலும் முடிவெடுக்கும் உரிமையிலும் அரசாங்கம் தலையிடுவதை கனேடியர்கள் விரும்பவில்லை என எரின் ஓ’டூல் கூறினார்.
ஆனால் கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தை ஆதரித்து கனடாவின் 3-ஆவது பெரிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கருத்து வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் கட்டாயத் தடுப்பூசி திட்டத்தை அமுல்படுத்துமாறு அக்கட்சித் தலைவர் ஜக்மித் சிங் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, லிபரல் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என இரு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. எனினும் கன்சர்வேடிவ் கட்சி இதைப் பின்பற்றவில்லை.
ட்ரூடோ தடுப்பூசித் திட்டத்தை அரசியலாக்குகிறார். இந்த நடவடிக்கை “ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது” என ஓ’டூல் விமர்சித்துள்ளார்.