கனடாவில் கொவிட் தொற்று நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் சன்விங் ஏர்லைன்ஸ் விமானத்தில் முகக்கவசம் இன்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த புகைப்படங்கள், செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முகக்கவசம் அணியாது இவ்வாறு கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்கள் குறித்த விசாரணைக்கு கனடா போக்குவரத்து அமைச்சர் ஓமர் அல் காப்ரா உத்தரவிட்டுள்ளார்.
டிசம்பர் 30-ஆம் திகதி மொன்றியலில் இருந்து ரொரன்டோ வந்த விமானத்தில் பயணிகள் முகக்கவசம் அணியாது செல்பி எடுப்பது, மது அருந்துவது மற்றும் ஒன்றாகக் கூடுவது போன்ற புகைப்படங்களுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள நிலையியேயே அமைச்சர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
சன்விங் விமானத்தில் இடம்பெற்ற ஏற்றுக்கொள்ள முடியாத பயணிகளின் நடத்தை குறித்து நான் அறிந்துள்ளேன் என அல்காப்ரா கூறினார்.
பயணிகளின் இவ்வாறான நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. இது எங்கள் விமானப் பணிக்குழுவினரை பெரும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என சன்விங் விமானப் பணிப்பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய பொது ஊழியர் சங்கத்தின் (CUPE) உள்ளூர் தலைவர் ரெனா கிஸ்பால்வி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நடத்தைகள் இனியும் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவது மத்திய அரசு மற்றும் விமான நிறுவனங்களின் பொறுப்பாகும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
தொற்று நோய் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்கள் ஜனவரி 17 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடியுள்ளன.
அத்துடன், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கியூபெக் மாகாணத்தில் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாகாணத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.