கனடிய பிரதமர் ட்றூடோ தான் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவரது இடத்துக்கு கட்சி இன்னுமொருவரைத் தெரிவுசெய்யும்வரை காபந்து தலைவராக இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். தற்போது குளிர்கால விடுப்பில் இருக்கும் பாராளுமன்றம் ஜனவரி 27 ம் திகதி மீண்டும் கூடவிருந்ததெனினும் அதை எதிர்வரும் மார்ச் 24 ம் திகதி வரை ஒத்திவைக்கவிருப்பதாகவும் அதற்கான உத்தரவை அவர் ஆளுனரிடமிருந்து பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.
2013 முதல் மத்திய லிபரல் கட்சியின் தலைவராகவும் 2015 முதல் நாட்டின் பிரதமராகவும் இருந்துவரும் ஜஸ்டின் ட்றூடோ பதவியிலிருந்து விலகி புதிய தேர்தல்களுக்கு வழிவகுக்க வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியேர்வ் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்ததுடன் பல தடவைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் மூலமும் முயற்சித்த்திருந்தும் இதர சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவோடு அவர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார். இருப்பினும் மக்கள் ஆதரவில் பின்னின்றதும் அவரது கட்சி உறுப்பினர்கள் பலரும் அவர் பதவி விலகவேண்டுமெனக் கோரிக்கை விடுத்ததும் காரணமாக தற்போது அவர் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான, 53 வயதான ட்றூடோவின் இரண்டு தசாப்த கால ஆட்சியின்போது நாடு பொருளாதார ரீதியில் வெகுவாகப் பின்தங்கிய நிலையில் இருப்பதும் கோவிட் பெருந்தொற்று விடயத்தில் அவரது ஆட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் நாட்டின் இந்நிலைமைக்குக் காரணம் எனவும் பல அரசியல் அவதானிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலைமைக்கு துணை பிரதமரும், நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃபிறீலானட் ஒரு வகையில் காரணமாக இருந்தாரெனினும் கனடிய மத்தியவங்கியின் வட்டி வீதக்குறைப்பு போன்ற விடயங்களின் மூலம் பொருளாதாரத்தை ஓரளவு சீர்திருத்திவிடலாம் என எதிர்பார்த்திருந்தும் அது நடைபெறவில்லை என அறிந்ததும் அவருக்கு நெருக்கமான பல அரசியல்வாதிகள் அவரைக் கைவிட்டுவிட்டு ஓடத்தலைப்பட்டனர். இந்நிலையில் ட்றூடோவுக்குப் பதவி விலகுவதைவிட வேறு வழியில்லாமல் போய்விட்டது.
அமெரிக்காவின் ஜனாதிபதி ட்றம்பின் இம்மாத பதவியேற்பைத் தொடர்ந்து கனடிய ஏற்றுமதிகளுக்கு 25% தீர்வை வசூலிக்கப்படும் என்ற எச்சரிக்கை காரணமாக கனடிய பொருளாதாரம் மேலும் மிக மோசமான பின்னடைவைச் சந்திக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியிலிருந்தால் கனடிய-அமெரிக்க உறவில் மாற்றங்கள் ஏற்படச் சாத்தியமுண்டு எனச் சிலர் நம்புகிறார்கள். இதனால் அடுத்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி இலகுவாக ஆட்சியமைக்கக்கூடிய சாத்தியங்களுண்டு என மக்கள் நம்புகிறார்கள்.
எப்படியாயினும் அடுத்த பொதுத்தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் (2025) நடைபெறக்கூடுமெனவும் அதற்குள் லிபரல் கட்சி தனது புதிய தலைவரைத் தெரிவுசெய்துவிடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.