ஒமிக்ரோன் திரிவு அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவில் மீண்டும் தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் தொற்று நோய் பொருளாதார நிவாரண திட்டங்களை கனடா விரிபுபடுத்தியுள்ளது.
தொற்று நோய் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஊதியம் மற்றும் வாடகை மானியங்கள் அளிக்கப்படும் என கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தொற்று நோய் நெருக்கடியால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
இதேவேளை, தொற்று நோய் கட்டுப்பாடுகளால் வேலை இழைந்த கனடியர்களுக்கான நிவாரண உதவித் திட்டத்துக்கு கனடா பாராளுமன்றம் கடந்த வாரம் அனுமதி அளித்தது.
இதன்படி வேலை இழந்த கனடியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் 300 கனடிய டொலர்கள் வழங்கப்படவுள்ளது.
முன்னதாக அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவர்கள் மட்டுமே இந்த நிவாரண உதவிகளைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது.
எனினும் புதிய அறிவித்தலின் பிரகாரம் கொவிட் கட்டுப்பாடுகளால் 50% அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்தை இழந்த தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளும் நிவாரண உதவிகளைப் பெற தகுதியுடையவர்கள் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய தற்காலிக நிவாரண அறிவிப்பு டிசம்பர் 19 முதல் பெப்ரவரி 12 வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரண உதவித் திட்டங்களுக்கு மதிப்பிடப்பட்ட செலவீனம் 4.5 பில்லியன் கனடிய டொலர்களாகும் என கனடா துணைப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தெரிவித்தார்.