கனடாவின் தபால் திணைக்களம் பாரியளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு போதிய அளவு நிதி வசதி கிடையாது என தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் பணிப்பாளர் சபை மற்றும் சிரேஸ்ட முகாமைத்துவத்தினர் மிகவும் நெருக்கடியான நிலையில் நிறுவனம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கனடிய தபால் திணைக்களத்தை நடத்திச் செல்வதற்கு அடிப்படை ரீதியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கோவிட் காலத்தில் இணைய வழியிலான கொள்வனவு முறைமை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதுடன் அதி உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனடிய தபால் திணைக்களம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பொதிகள் அனுப்பி வைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு மக்கள் தபால் திணைக்களத்தை தவிர்த்து வேறு நிறுவனங்களின் சேவையைப் பெற்றுக் கொள்ள தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்த இடைவெளியில் ஐந்து தசம் ஐந்து பில்லியன் கடிதங்களை விநியோகம் செய்த தபால் திணைக்களம் தற்பொழுது இரண்டு பில்லியன் கடிதங்களை விநியோகம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் காலாண்டு பகுதியில் 76 மில்லியன் டாலர்கள் நட்டத்தை எதிர் நோக்கிய கனடிய தபால் திணைக்களம் இரண்டாம் காலாண்டில் 46 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருமானம் வேறு துணை நிறுவனத்தின் ஊடாக லாபமீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.