கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து ஏர் கனடா விமானம் மூலம் கன்டெய்னர் ஒன்று பியர்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
அதில், 400 கிலோ தூய தங்க கட்டிகளும், 2.5 மில்லியன் கனடா டாலரும் இருந்தன. விமானநிலையத்தின் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இந்த கன்டெய்னர் அன்றைய தினமே போலிஆவணம் மூலம் திருடப்பட்டது. இதுதொடர்பாக, காவல் துறை நடத்திய விசாரணையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், பரம்பால் சித்து (54) , அமித் ஜலோடா (40) ஆகியோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒண்டாரியோவில் வசித்து வருகின்றனர்.
கனடாவில் இதுவரை இல்லாத வகையில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவம் குறித்து பொலிஸார் ஓராண்டு நீண்ட விசாரணைக்குப் பிறகு 7 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.