Reading Time: < 1 minute

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடு பொருளாதார மந்தநிலைக்குள் நுழையும் என்று கனடாவின் ராயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கனடாவில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வேலை வாய்ப்பு 92,000 குறைந்துள்ளது. மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ராயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதுவரை, கனடா மிதமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் என கூறி வந்துள்ள இவர்கள், தற்போது வட்டி விகிதங்கள் கனடாவில் நான்கு சதவீதமாகவும், அமெரிக்காவில் 4.5 முதல் 4.75 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், கனடாவில் முதல் காலாண்டிலேயே பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், முதலில் உற்பத்தி துறை பாதிக்கப்படும் எனவும், தொடர்ந்து சுற்றுலாத்துறை சரிவை எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, விலைவாசி உயர்வு, அதிக வட்டி விகிதங்கள் காரணமாக மக்களின் சராசரி வாங்கும் திறன் 3,000 டொலர் என குறையும் எனவும் எச்சரிக்கின்றனர்.