கனடாவில், விமான நிலையத்தின் அருகில் சிறிய ரக விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மொன்றியலின் (Montreal) மேற்கும் பகுதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
Cessna-150 என்ற இரண்டு இருக்கைகளைக் கொண்ட சிறிய ரக விமானம் அங்கிருந்த விமான நிலையம் அருகில் பறந்துசென்றபோது திடீரென கீழே விழுந்து நொருங்கியது.

இதில் விமானத்தில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் படுகாயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் குறித்த ஏனைய விபரங்களை பொலிஸார் தெரிவிக்கவில்லை. அத்துடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெற்றுவருவதாக கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.