Reading Time: < 1 minute

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை குறித்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இந்தியாவை தனிப்பட்ட ரீதியிலும் பகிரங்கமாகவும் கேட்டுக்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனை அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கனடா பிரதமர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் நாங்கள் எங்கள் கனடா சகாக்களுடன் இந்த விடயம் தொடர்பில் நெருங்கிய தொடர்பில் உள்ளோம்.

கனடாவின் விசாரணைகள் தொடர்வதும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் முக்கியமான விடயம் என அமெரிக்கா கருதுகின்றது.

எனவே கனடாவின் விசாரைணகளிற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என நாங்கள் வெளிப்படையாகவும் தனிப்பட்ட ரீதியிலும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.