Reading Time: < 1 minute

கனடா சர்வதேச பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து ஆலோசித்துவரும் நிலையில், அது தொடர்பில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கனடாவுக்கு வருவோர் தனிமைப்படுத்தல் குறித்து சரியான ஒரு திட்டம் வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

விளக்கமாக கூறினால், கனடாவுக்குள் வந்த பிறகு ஒருவேளை கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால், அதற்கேற்ற வகையில் தனிமைப்படுத்தல் தொடர்பில் மாற்று திட்டம் ஒன்றை வைத்திருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

(நீங்கள் விமானம் ஏறும் முன், உங்களிடம் முழுமையாக தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம், அல்லது கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆதாரம் இருந்து அவற்றை சமர்ப்பித்தால் நீங்கள் கனடாவுக்குள் நுழையலாம்).

நீங்கள் சமர்ப்பிக்கும் தனிமைப்படுத்தல் திட்டத்தில், நீங்கள் எங்கு உங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளப்போகிறீர்கள், உங்களுக்கான உணவு, தண்ணீர், மருந்துகள் முதலானவற்றை தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறாமலே எப்படி பெற்றுக்கொள்வீர்கள் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவேண்டும் என கனடா அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

நீங்கள் கனடா எல்லைக்குள் நுழையும்போது தனிமைப்படுத்தல் திட்டம் குறித்த ஆதாரம் உங்களிடம் கேட்கப்படாது. அதற்கு பதிலாக, உங்கள் திட்டம் குறித்த கேள்விகள் கேட்கப்படும், அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க நீங்கள் தயாராக இருக்கவேண்டும்.

இன்னொரு விடயம், இந்த தனிமைப்படுத்தல் ஹொட்டல்களில்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடுகளில்கூட நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம் (அதற்கான வசதி அந்த வீட்டிலிருக்கும் பட்சத்தில்). கடைசியாக, ஒரு முக்கிய விடயம். கனடாவுக்கு வருவதற்கு மூன்று நாட்கள் முன்பு, ArriveCAN ஆப்பில், உங்கள் தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை தொடர்பான ஆவணங்களின் நகல் ஒன்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். அல்லது, ArriveCAN இணையதளத்திலும் தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை தொடர்பான விடயங்களை நிரப்பலாம்.