Reading Time: < 1 minute

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான இந்தியாவின் சீரம் மருந்து உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 500,000 அஸ்ட்ராஜெனெகா- கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நாளை புதன்கிழமை கனடாவுக்கு வர உள்ளன.

கனடாவின் தாமதமான தடுப்பூசி திட்டங்களை துரிதப்படுத்த இந்தத் தடுப்பூசிகளின் வருகை உதவும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சீரம் மருந்து உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா- கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஹெல்த் கனடா அங்கீகாரம் அளித்த நிலையில் இதனை விட மேலும் இலட்சக்கணக்கான தடுப்பூசிகள் கனடா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் விவசாயிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கடந்த ஆண்டு பிற்பகுதியில் கனேடியப் பிரதமர் ட்ரூடோ கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தியா -கனடா இடையிலான இராஜதந்திர உறவுகளில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதற்கான அறிகுறியாக, கனடாவுக்கு தடுப்பூசிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இதுவரை சுமார் 3.6% கனேடியர்கள் மட்டுமே குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

கனடாவின் சொந்தத் தடுப்பூசித் தி்ட்டம் ஏதும் இல்லாத நிலையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பிற நாடுகளையே கனடா நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் போதியளவு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கனடா நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.