ஞாயிற்றுக்கிழமை இரவு, 10.49 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டனில், பற்றியெரிந்தபடி பயணித்த ரயில் ஒன்றைக் கண்ட பலர் அவசர உதவியை அழைத்தனர்.
என்றாலும், நீண்ட தூரம் பயணித்தபிறகே அந்த ரயில் நின்றது. ரயில் பாதைகளில் தண்டவாளங்களுக்கிடையே பதிக்கப்படும் மரக்கட்டைகள் இருந்த ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்த நிலையில், அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள பொருட்கள் இருந்த பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக, ரயில் பணியாளர்கள், தீப்பற்றிய ஐந்து பெட்டிகளை கழற்றிவிட்டுள்ளனர்.
10 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 28 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியதுடன், அப்பகுதியில் கடும் புகை சூழ்ந்ததால், ஜன்னல்களை மூடிக்கொண்டு வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டனர்.
திங்கட்கிழமை 12.30 மணிக்கு, புகை முற்றிலும் விலகியபிறகே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் பின்னணியில் சதி ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.