அமெரிக்காவின் கோவிட்-19 தடுப்பூசிகளை கனடா அல்லது மெக்ஸிகோவுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தற்போதைய நிலையில் பைடன் நிர்வாகம் அனுமதிக்காது என அவரது ஊடகச் செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் வெளிப்படையாக உதவி கேட்க மெக்ஸிகோ திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனவும் ஜென் சாகி நிராகரித்துள்ளார். அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதிலேயே ஜனாதிபதி ஜோ பைடன் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் எனவும் அவர் தெரிவித்தார். வெள்ளை மாளிகையின் இந்தக் கொள்கையை அறிந்த நிலையிலேயே கடந்த வாரம் பைடனுடன் இடம்பெற்ற மெய்நிகர் வழி சந்திப்பின்போது கனடாவுக்கு தடுப்பூசி வழங்கும் கோரிக்கையை பிரதமர் ட்ரூடோ அவரிடம் விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதேவேளை, ஜோன்சன்&ஜோன்சன் ஒற்றைத் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அதன் முதல் தொகுதி அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து பைசர்-பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகளுடன் தற்போது ஜோன்சன்&ஜோன்சன் தடுப்பூசியும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
எனினும் ஜோன்சன்&ஜோன்சன் தடுப்பூசிக்கு ஹெல்த் கனடா இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால் கடந்த வாரம் ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மற்றும் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனெகா- கோவிஷீல்ட் தடுப்பூசி ஆகியவற்றுக்கு கனடாவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.