கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடிசிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தனது அமைச்சரவை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.
உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பழங்குடி மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் கனடாவில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்தார்.
எனினும் இதனைத் தாண்டி, கனடாமுழுவதிலும் உள்ள பழங்குடி குடியிருப்புப் பள்ளி புதைகுழிகளில் ஆராய்ச்சி மற்றும் அகழ்வாராய்ச்சிகளைமுன்னெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு அழுதங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இது குறித்து எந்தவிதமான உறுதியான அறிவிப்புக்களையும் பிரதமர் ட்ரூடோ வெளியிடவில்லை.215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கனேடிய பிரதமர் ஜஸ்ரின்ட்ரூடோ தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன பங்கு வகிக்க வேண்டும்?என்பது குறித்து தனது அமைச்சரவையுடன் விவாதிக்கவுள்ளதாக ட்ரூடோ கூறினார்.
கனடாவில் மேலும் பல இடங்களில் பழங்குடி எச்சங்கள் புதைக்கப்படலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் இது குறித்த உண்மையை கண்டுபிடிப்பது நல்லிணக்கத்துக்கு ஒரு முக்கிய பகுதியாகும் என ட்ரூடோ தெரிவித்தார்.
பழங்குடி சமூகங்கள் தங்கள் கடந்த கால துயரங்களை புரிந்துகொண்டு எதிர்காலத்தில் சரியான வழியில் முன்னேற நாங்கள் அவர்களுடன் இணைந்திருந்து உதவுவோம் எனவும் கனேடியப் பிரதமர் மேலும் கூறினார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம்- கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பள்ளியில் 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டன. மீட்கப்பட்ட சில எச்சங்கள் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுடையவை. ஆனால் அவர்கள் இறந்ததற்கான காரணங்கள் மற்றும் காலம் இன்னும் அறியப்படவில்லை.
கம்லூப்ஸ் இந்திய குடியிருப்பு பள்ளி 1890 ஆம் ஆண்டில் திருச்சபையின் தலைமையில் நிறுவப்பட்டது.1978 இல் இப்பள்ளி மூடப்பட்டது.
கனடாவின் குடியிருப்புப் பள்ளிகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பழங்குடி சிறுவர்கள், இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அரசாங்கமும் மற்றும் மதவாதிகள் நடத்தும் கட்டாய உறைவிடப் பள்ளிகளாக இருந்தன.
இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் உரிய வசதிகள் இன்றிமோசமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு குறைந்த இடவசதிகளில் அதிகளவு மாணவர்கள் தங்கவைக்கப்பட்ட நிலையில் பலர் தட்டம்மை, காசநோய், காய்ச்சல் மற்றும் பிற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் பள்ளி ஆவணக் குறிப்புக்களில் இருந்து தெரியவந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.