கனடா மற்றும் மெக்சிகோ உடனான தனது தரைவழி எல்லைகளை முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக நவம்பர் மாதம் முதல் மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
தடுப்பூசி போடப்படாத பயணிகள் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து தரை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய தொடர்ந்தும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருவேர் கொவிட் தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கொவிட் தொற்று நோயை அடுத்து கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து பயணிகள் அமெரிக்கா வருவதற்கு கடந்த மார்ச் 2020 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் பாதுகாப்பான தரைவழிப் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போதுவரை கடந்த 14 நாட்களுக்குள் இங்கிலாந்து, சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஈரான், பிரேசில் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற பயண வரலாற்றைக் கொண்ட பெரும்பாலான அமெரிக்கரல்லாத குடிமக்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
எனினும் இந்த விதிகளும் நவம்பரில் நீக்கப்படும் என்று ஜோ பைடன் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்தது. மாணவர்கள், லொறி சாரதிகள், அமெரிக்க குடிமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பயணிகள் தரை வழி எல்லைகளைக் கடக்க இதுவரை தடை விதிக்கப்படவில்லை.
எனினும் அவர்கள் மெக்சிகோ அல்லது கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும்போது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டமைக்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறை 2022 ஜனவரி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறை அத்தியாவசிய பயணிகள் முழுமையாகத் தடுப்பூசி போடுவதற்கு போதுமான அவகாசத்தை அளிக்கும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோ உடனான தனது தரைவழி எல்லைகளை முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக நவம்பர் மாதம் முதல் மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளபோதும் அதற்கான உறுதியான திகதி அறிவிக்கப்படவில்லை. எனினும் துரிதமாக இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் சா்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா உடனான தனது எல்லைகளை கடந்த ஆகஸ்ட் 9 முதல் கனடா திறந்துள்ளது. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் கனடாவுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இதுவரை அமெரிக்காவில் சுமார் 44.5 மில்லியன் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 716,000 க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.